சென்னை: தமிழில் வெளியாகி ஹிட்டடித்த ‘கருடன்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதிதி ஷங்கர் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் தெலுங்கில் நடிகையாக அறிமுகமாகிறார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கருடன்’. லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல், விமர்சனம், ரீமேக் உரிமைகள் என அனைத்திலுமே கொண்டாடப்பட்டது. தற்போது ‘கருடன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு ‘பைரவம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இதில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நரா ரோஹித் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதில் நாயகிகளாக ஆனந்தி, அதிதி ஷங்கர் மற்றும் திவ்யா பிள்ளை ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பை டிசம்பருக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ‘கருடன்’ தெலுங்கு ரீமேக்கினை ‘நந்தி’ படத்தினை இயக்கிய விஜய் கனகமெடலா இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இந்தப் படத்தில் நடிக்கும் அதிதி ஷங்கரின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதிதி. இந்தப் படம் மூலம் தெலுங்கில் நடிகையாக அறிமுகமாகிறார். போஸ்டரை பொறுத்தவரை இருசக்கர வாகனத்தில் பால் கேனை சுமந்தபடி, தலையில் பூ வைத்துக் கொண்டு அசல் கிராமத்து பெண்ணாக காட்சியளிக்கிறார். படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.