கன்னி மனதுக்கு சரியென தோன்றுவதை திட்டவட்டமாக செய்து முடிக்கும் ஆற்றலுடையவர்களே! உங்கள் ராசிக்கு 4-ம் வீடான சுக வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் விரைந்து முடியும். மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கனிவான பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 17.05.2025 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மனஇறுக்கம் வந்து செல்லும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம்.ஆனால் 18.05.2025 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12-ம் வீட்டிலும், ராகு 6-ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். இனி உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். திருமணத் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 13.05.2025 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நீடிப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
14.05.2025 முதல் வருடம் முடியும் வரை குரு 10-ம் வீட்டில் அமர்வதால் சிறுசிறு அவமானம், ஏமாற்றம் வந்து நீங்கும். சட்டத்துக்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்குவீர்கள்.
இந்தாண்டு தொடக்கத்தில் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-வது வீட்டிலேயே வலுவாக இருப்பதால் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்கு கிடைக்கும். விஐபிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.
வேற்றுமொழிக்காரர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அந்த வெற்றி மூலம் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். 29.03.2025 முதல் சனிபகவான் 7-ம் வீட்டில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் எதிலும் தடுமாற்றமும், வீண் செலவுகளும் வந்துபோகும். நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்யுங்கள். நடைபயிற்சியும் இருக்கட்டும்.
வியாபாரிகளே! அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கை யாளர்களை அதிகப்படுத்த சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்களை சேர்ப்பீர்கள். நன்கு அறிமுகமானவர்களானாலும் கடன் தரவேண்டாம். புரோக்கரேஜ், ஏஜென்ஸி வகைகளால் ஆதாயம் உண்டு. உணவு, இரும்பு, கட்டிட பொருட்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கப்போய் சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும். என்ன தான் இரவு பகலாக உழைத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள். விருப்பமில்லாத இடமாற்றம் உண்டு. மேலதிகாரியுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் இருந்தாலும் அனுசரித்துப் போவது நல்லது.
இந்த 2025-ம் ஆண்டு உங்களை விஸ்வரூப மெடுக்க வைப்பதுடன், திடீர் யோகங்களையும், வெற்றியையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதியை ஏதேனும் ஒரு திங்கள்கிழமையில் சென்று வணங்குங்கள். சுப்ரபாதம் பாடுங்கள். சனிக்கிழமைகளில் வீட்டு விலங்குகளுக்கு அன்னமிடுங்கள். வேப்ப மரக்கன்று நடுங்கள். உங்களின் கனவுகள் நனவாகும்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |