‘கண்ணாடிப்பூவே’ பாடல் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன். ‘ரெட்ரோ’ படத்தின் ‘கண்ணாடிப்பூவே’ பாடலுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் பாடல் வரிகள், இசை என சூர்யா ரசிகர்கள் மட்டுமன்றி இசை ஆர்வலர்கள் மத்தியிலும் இப்பாடல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட பதிவில், “கண்ணாடிப்பூவே என் இதயத்திற்கு நெருக்கமான பாடல். மேலும் எனது சில படங்களில் நான் இசையமைப்பதை நான் எப்போதும் விரும்பும் வகையிலான இசை. நீங்கள் காட்டும் அன்புக்கு மிக்க நன்றி.
பொதுவாக வெளிப்படாமல் இருக்கும் இதுபோன்ற தனிப்பட்ட படைப்புகளை விரும்புவதைக் காட்டிலும் கலைஞர்களான எங்களுக்கு எதுவும் பெரிய மகிழ்ச்சியைத் தருவதில்லை. இந்த அன்பு எங்களுக்கு ஒரு திருப்புமுனை. இது புதிய ஆய்வுக்கான பெரும் நம்பிக்கையை எங்களுக்கு அளிக்கிறது. மனம் நன்றியுணர்வால் நிரம்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ரெட்ரோ’. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
மே 1-ம் தேதி இப்பட்ம உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதால், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.