‘கண்ணப்பா’ படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
ஏப்ரல் 25-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட படம் ‘கண்ணப்பா’. ஆனால், இறுதிகட்டப் பணிகள் தாமதத்தினால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. கிராபிக்ஸ் பணிகள் முடியாதது தான் காரணம் என படக்குழு தெரிவித்தது. தற்போது அப்பணிகளை கணக்கில் கொண்டு புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார்கள்.
ஜூன் 27-ம் தேதி ‘கண்ணப்பா’ வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். அதற்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து, வெளியீட்டுக்கு தயார் செய்ய படக்குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ‘கண்ணப்பா’ படத்தினை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கண்ணப்பா’. இதனை மோகன் பாபு தயாரித்திருக்கிறார். இதில் பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.