நடிகை கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி திரைப்படத்தை திரையிட இங்கிலாந்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் சீக்கிய அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கடந்த 1975-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட அவசரநிலையை மையமாக வைத்து ‘எமர்ஜென்சி’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இதில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இதன் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர்.
இந்தப் படம் சீக்கிய சமுதாயத்தினரை தவறாக சித்தரிப்பதாகவும், வரலாற்று உண்மைகள் இந்த படத்தில் திரித்து வெளியிடப்பட்டுள்ளது என இந்தியாவில் ஏற்கெனவே சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்தப்படம் சென்சாரில் சிக்கி நீண்ட தாமதத்துக்குப் பின் வெளியாகியுள்ளது.
இந்தப்படம் இங்கிலாந்தில் வடமேற்கு லண்டன், வோல்வர்ஹேம்டன், பர்மிங்ஹாம், மான்செஸ்டர் உட்பட பல பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் வெளியானது. இங்கு இந்த திரைப்படத்தை வெளியிட சீக்கிய பத்திரிக்கையாளர் சங்கம் உட்பட பல சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றன. எமர்ஜென்சி திரைப்படம் சீக்கியர்களுக்கு எதிரான படம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஹாரோ வியூ சினிமா அரங்கில் இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி பாப் பிளாக்மேன் உட்பட பலர் இந்த படத்தை கடந்த ஞாயிற்று கிழமை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தியேட்டருக்குள் முகமூடி அணிந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து பார்வையாளர்களை மிரட்டி, திரைப்படத்தை நிறுத்தியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த எம்.பி. பாப் பிளாக்மேன், ‘‘ எமர்ஜென்சி திரைப்படும் இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தெரிவிக்கிறது. இந்த திரைப்படம் மிகவும் சர்ச்சையானது. இது குறித்து நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் திரைப்படத்தை பார்த்து கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது’’ என்றார்.
இங்கிலாந்தில் எழுந்துள்ள இந்த எதிர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘‘ எமர்ஜென்சி திரைப்படத்துக்கு இங்கிலாந்தில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து அந்நாட்டு அதிகாரிகளிடம் கவலை தெரிவித்துள்ளோம். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் மீது இங்கிலாந்து அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்’’ என கூறியுள்ளது.