ஓடிடியில் ‘மர்மர்’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 4) வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி இப்போது இந்தப் படம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.
மார்ச் 7-ம் தேதி வெளியான படம் ‘மர்மர்’. புதுமையான வகையில் சொல்லப்பட்ட இப்படத்தின் கதைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன் விளம்பரத்துக்கு அதிகப்படியான செலவு செய்ததால், படத்துக்கு மக்கள் கூட்டம் அதிகரித்தது. ஆனால், படம் பார்த்த பலரும் இப்படம் நன்றாக உள்ளது எனவும் கருத்து தெரிவித்தார்கள்.
தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம் மற்றும் டெண்ட்கொட்டா ஆகியவை கைப்பற்றி இருக்கின்றன. இன்று (ஏப்ரல் 4) முதல் இரண்டு ஓடிடி தளங்களிலும் இப்படம் வெளியாகி இருக்கிறது.
ஒன்லைன் என்ன? – அட்வெஞ்சர் வீடியோக்கள் வெளியிட்டு ‘வியூஸ்’ அள்ளும் ரிஷி (ரிச்சி), மெல்வின் (தேவராஜ்), அங்கிதா (சுகன்யா), ஜெனிபர் (அரியா) ஆகிய யூடியூபர்கள், முழுநிலா நாளில் குழுவாக ஜவ்வாது மலை காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். காந்தா (யுவிகா) என்ற மலைக்கிராமத்துப் பெண் வழிகாட்டிபோல் செல்கிறாள்.
காட்டின் நடுவில் இருக்கும் குளத்தில் குளிக்க வரும் சிறுதெய்வங்களான ‘சப்த கன்னியர்’களையும் அவர்களைத் தடுக்கும் மங்கை என்கிற ஆவியையும் கேமராவில் பதிவு செய்து வெளியிட வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அதை அவர்களால் சாதிக்க முடிந்ததா, அவர்கள் உயிரோடு வீடு திரும்பினார்களா என்பதுதான் திரைக்கதை.