சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என தன்னை அழைக்க வேண்டாம் என சாய்ரா பானு தெரிவித்துள்ளார். தாங்கள் இருவரும் விவாகரத்து பெறவில்லை, பிரிந்து வாழ்ந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை உடலில் நீர்ச்சத்து குறைந்த காரணத்தால் ரஹ்மான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
“ரஹ்மான் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். நாங்கள் இருவரும் இன்னும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் இருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.
அவருக்கு எந்த வகையிலும் நான் அழுத்தம் தர விரும்பவில்லை. அதனால் என்னை ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று சொல்ல வேண்டாம் என ஊடகங்கள் வசம் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பிரிந்திருந்தாலும் அவருக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என சாய்ரா பானு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவரது தரப்பில் வெளியாகி உள்ள அறிக்கையில், “திருமணம் ஆகி பல ஆண்டுகள் கடந்த நிலையில் தனது கணவர் ரஹ்மானை பிரிந்து வாழ சாய்ரா பானு முடிவு செய்தார். இது மிகவும் கடினமான முடிவுகளில் ஒன்று.
அவர்களது மண வாழ்க்கையில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பிரிந்து வாழும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குள் ஆழமான அன்பு இருந்தபோதிலும், சில சிரமங்கள் காரணமாக பிரிந்துள்ளனர். வலி மற்றும் வேதனை காரணமாக இந்த முடிவை சாய்ரா எடுத்துள்ளார். தன் வாழ்க்கையின் கடினமான அத்தியாயத்தை கடந்து செல்லும் சவாலான இந்நேரத்தில் பிரைவசி வேண்டும் என சாய்ரா விரும்புகிறார்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு விடை கொடுத்து பிரிவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தனர். அப்போது சாய்ரா பானு ஆடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் உடல்நலன் சார்ந்து மும்பையில் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.