நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, தம்பி ராமையா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘திரு மாணிக்கம்’. சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “எல்லோரும் வெற்றிக்காகத்தான் உழைக்கிறோம். பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் போல் நாம் கண்டவெற்றியைத் தாண்டத்தான் உழைக்கிறோம். இந்தப்படத்தில் நல்ல மனதுக்காரர்கள் இணைந்தார்கள். சில படங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தானாக அமையும். உண்மைதான் நேர்மை. நேர்மை என்பது தான் இயல்பு.
முன்பெல்லாம் ‘கெட்டவனிடம் சேராதே வம்புல இழுத்து விட்டுவிடுவார்கள்’ என்று சொல்வார்கள். இப்போது நல்லவனைப் பார்த்து அப்படிச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். நந்தா பெரியசாமி என்னை விட நல்லவர். சிலருக்குக் காலம் வெற்றியைத் தரும், அவருக்கு நல்ல காலம் வந்துவிட்டது. இப்படம் கண்டிப்பாக வெல்ல வேண்டும்” என்றார்.