பழம் பெரும் நடிகையும், நடிகர் ஏவிஎம்.ராஜனின் மனைவியுமான புஷ்பலதா, வயது மூப்பின் காரணமாக நேற்று (பிப்ரவரி 4) காலமானார்.
தமிழில் ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான புஷ்பலதா ‘யாருக்கு சொந்தம்’, ‘நானும் ஒரு பெண்’, ‘சிம்லா ஸ்பெஷல்’, ‘கற்பூரம்’, ‘பார் மகளே பார்’, ‘புதுவெள்ளம்’, ‘சாரதா’, ‘ஜீவனாம்சம்’ உள்பட 100க்கும் மேலான படங்களில் ஹீரோயினாகவும், குணசித்திரமாகவும் நடித்திருக்கிறார். இவரின் மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
![``எப்போதும் அக்கறையுடன் இருக்கக்கூடியவர், வருத்தமா இருக்கு" - புஷ்பலதா மறைவிற்கு கார்த்தி இரங்கல் 3 புஷ்பலதா](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-05/fk0pdzix/push.gif)
அந்த வகையில் நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, “ புஷ்பலதா அம்மா, ஏவிஎம். ராஜன் சார் இருவரும் சினிமாவில் பிரபலமான ஜோடிகள். நிறைய இடங்களுக்குப் பயணம் செய்திருக்கிறார்கள். பேரன், பேத்தி என்று ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்.
உடல்நலக் குறைவால் காலமாகி இருக்கிறார். இவர்களின் வீடு நடிகர் சங்கத்திற்கு அருகிலேயே இருப்பதால் அடிக்கடி அடிக்கடி வந்து ஐயாவை ( ஏவிஎம்.ராஜன்) பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.
எப்போதும் அக்கறையுடன் இருக்கக்கூடியவர். அவரின் இறப்பு மனவருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.