பிறந்த நாள் வருவதை முன்னிட்டு, தனது ரசிகர்களுக்கு நடிகர் யஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனவரி 8-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார் யஷ். இதனை முன்னிட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் யஷ், “என் அன்பான நலம் விரும்பிகளுக்கு, புதிய ஆண்டு உதயமாவது என்பது, பிரதிபலிப்பு, தீர்மானங்கள் மற்றும் ஒரு புதிய திட்டத்தை பட்டியலிடுவதற்கான நேரம். பல ஆண்டுகளாக நீங்கள் அனைவரும் என் மீது பொழிந்த அன்பு அளப்பரியது. ஆனால், சில அசம்பாவித சம்பவங்களும் நடந்துள்ளன.
குறிப்பாக என் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று வரும்போது, நம் அன்புமொழியை மாற்ற வேண்டிய நேரம் இது. உங்கள் அன்பின் வெளிப்பாடு ஆடம்பரமான நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் இருக்கக்கூடாது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை அறிவது, நேர்மறையான உதாரணங்களை அமைப்பது, உங்கள் இலக்குகளை அடைவது மற்றும் மகிழ்ச்சியை பரப்புவதுதான் எனக்கு மிகப்பெரிய பரிசு.
என்னுடைய பிறந்தநாளில் நான் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பேன், ஊரில் இருக்க மாட்டேன். இருப்பினும், உங்கள் விருப்பங்களின் அரவணைப்பு எப்போதும் என்னை வந்தடையும் மேலும் என் நம்பிக்கையை தூண்டி என்னை ஊக்குவிக்கும். பாதுகாப்பாக இருங்கள், உங்கள் அனைவருக்கும் 2025ம் ஆண்டு மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் யஷ்.
மம்தா மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘டாக்சிக்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் யஷ். இதில் நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கே.வி.என் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்து வருகிறது.