தன்னைப் பற்றி தவறான செய்தி வெளியிட்ட ஊடங்களுக்கு நடிகை சாய் பல்லவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘ராமாயணா’ படத்தில் சீதையாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. இதற்காக அசைவ உணவுகளை தவிர்த்து வருவதாகவும், தன்னுடன் எப்போதுமே உதவியாளர்களை வைத்துக் கொண்டு சைவ உணவுகளை மட்டுமே சமைத்து தரச் சொல்லி சாய் பல்லவி சாப்பிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தச் செய்தி குறித்து சாய் பல்லவி, “பெரும்பாலான சமயங்களில், கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும், அடிப்படையற்ற வதந்திகள், இட்டுக்கட்டப்பட்ட பொய்கள், தவறான அறிக்கைகள் உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதைக் காணும் போதெல்லாம் நான் அமைதியாக இருப்பதையே தேர்வு செய்கிறேன். ஆனால் அது நிற்காமல் தொடர்ந்து நடப்பதால் நான் எதிர்வினையாற்ற வேண்டிய நேரம் இது.
குறிப்பாக எனது படங்களின் வெளியீடுகள், அறிவிப்புகள், எனது கேரியரின் முக்கியமான தருணங்களில் அடுத்த முறை எந்த ஒரு புகழ்பெற்ற ஊடகமோ, தனிநபரோ, செய்தி அல்லது கிசுகிசு என்ற பெயரில் கேவலமான கதையை சொல்வதை நான் கண்டால், நீங்கள் என்னிடமிருந்து சட்டப்படி நடவடிக்கை என்ற தகவலை கேட்பீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.