மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வெளியான முதல் 4 நாட்களில் உலக அளவில் கிட்டத்தட்ட ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகவும், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். விமர்சன ரீதியில் ‘ஆவரேஜ்’ எனக் குறிப்பிடப்படும் இந்தப் படம், அஜித் ரசிகர்களுக்கு ‘மாஸ்’ தன்மைகளைத் தாண்டிய புதுவிதமான திரை அனுபவம் தந்துள்ளது.
பிப்ரவரி 6-ம் தேதி வெளியான இப்படம், முதல் நாளில் இந்திய அளவில் ரூ.26 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாளில் ரூ.11 கோடி, மூன்றாவது நாளில் ரூ.14 கோடி, நான்காவது நாளில் ரூ.14 அளவிலும் வசூலை ஈட்டிய ‘விடாமுயற்சி’, இந்திய அளவில் மட்டும் முதல் 4 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.65 கோடியை ஈட்டியது.
அதேவேளையில், வெளிநாடுகளைப் பொறுத்தவரையில், முதல் 3 நாட்களில் ரூ.33 கோடி அளவில் வசூல் செய்துள்ளது. நான்காவது நாளில் ரூ.5 கோடியை எளிதில் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, இந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக உலக அளவில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ ரூ.100 கோடியை எட்டியுள்ளதாக திரை வர்த்தக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஹாலிவுட்டின் ‘பிரேக் டவுன்’ படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட ‘விடாமுயற்சி’ படத்துக்காக அஜித்தின் சம்பளம் ரூ.110 கோடியில் இருந்து ரூ.120 கோடி வரை இருக்கக் கூடும் எனக் கூறப்படும் நிலையில், இதன் ஒட்டுமொத்த பட்ஜெட் ரூ.200 எனத் தெரிகிறது. முதல் 4 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.100 கோடியை எட்டிவிட்டதால், அடுத்தடுத்த தியேட்டர் வருவாய், டிவி – ஓடிடி ரைட்ஸ் உள்ளிட்ட வருவாய்களைக் கணக்கில் கொண்டால், ‘விடாமுயற்சி’ வெற்றிப் படமா என்பது மதிப்பிடப்படும்.