பிரபல இசை அமைப்பாளர் டி.இமானுக்கு நேற்று 42-வது பிறந்த நாள். அதை முன்னிட்டு, தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: என் பிறந்த நாளை முன்னிட்டு முழு உடல் உறுப்பு தானம் செய்திருக்கிறேன். என்னுடைய காலத்துக்குப் பிறகு எனது உடல் உறுப்புகள் யாருக்காவது பயன்படுவது போல இருந்தால், பயன்படுத்திக் கொள்ளலாம். யாரோ ஒருவரின் வாழ்க்கைக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த உடல் தானம் மூலமாக என்னுடைய காலத்துக்குப் பிறகும் வாழலாம் என்பதைத் தெரிந்து கொண்டேன். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இதற்கானப் பதிவைச் செய்து அதற்கான கார்டை பெற்றிருக்கிறேன். இது பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். இவ்வாறு டி.இமான் கூறியுள்ளார்.