இளையராஜா பயோபிக் தயாரிப்பு பொறுப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கையை தழுவி படமொன்று அவருடைய பெயரிலேயே அறிவிக்கப்பட்டது. அதற்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கப்பட்டன. அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இளையராஜாவுடன் இணைந்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்ததற்கான புகைப்படங்களும் வெளியாகின. ஆனால், அப்பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. அதில் இளையராஜாவாக நடிக்கவிருந்த தனுஷும் இதர படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
இதனால் ‘இளையராஜா’ பயோபிக் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதற்கு தயாரிப்பு பொறுப்பில் இருந்த கனெக்ட் மீடியா நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. தற்போது இளையராஜா பயோபிக் தயாரிப்பு பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என தெரிகிறது. ஏனென்றால் கனெக்ட் மீடியா நிறுவனத்துடன் இணைந்து ஏஜிஎஸ் நிறுவனமும் தயாரிக்கவுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தை முடிவுற்று, ஒப்பந்தப் பணிகள் தொடங்கவுள்ளன. இந்திப் படமொன்றை இயக்கவுள்ளார் அருண் மாதேஸ்வரன். அதனை முடித்துவிட்டு இளையராஜா பயோபிக்கை இயக்குவார் என தெரிகிறது.