தமிழ்நாட்டின் பண்ணைப்புரம் கிராமத்திலிருந்து புறப்பட்ட இளையராஜா, லண்டன் அப்பல்லோ அரங்கில் சிம்பொனியை அரங்கேற்றி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்திருக்கிறார். இதனால் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இளையராஜாவை பெருமையோடு வாழ்த்திவருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் வாழ்த்தி, லண்டலிருந்து திரும்பிய இளையராஜாவை அரசு மரியாதையுடன் வரவேற்றார். இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரை இசை பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவு செய்திருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.
இளையராஜாவை நேரில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. இப்படி பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் இளையராஜா. அதன் ஒரு பகுதியாக இன்று இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் மூத்த நடிகர் சிவகுமார். மேலும், இளையராஜாவுக்கு தங்கச் சங்கிலியையும் வழங்கியிருக்கிறார். நடிகர் சிவகுமாருடன் நடிகர் சூர்யா, பிருந்தா ஆகியோரும் மலர்க்கொத்து வழங்கி வாழ்த்தினர்.