சென்னை: அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. இங்கு 6 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
அஜித், த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் பங்குபெறும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் இன்று (டிச.17) முதல் தொடங்கியிருக்கிறது. இந்தப் படப்பிடிப்பு 6 நாட்கள் நடைபெறுகிறது. அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதுவரை டீசரை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் பாடல்கள், ட்ரெய்லரை வெளியிட்டு படத்தை விளம்பரப்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தை வரும் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட்டு விட வேண்டும் என்ற முனைப்பில் பணிகளை துரிதப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பணிகள் முடிவடைந்துவிடுமா என்பது விரைவில் தெரியவரும். லைகா நிறுவனம் தயாரித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் இருக்கிறது.
மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அஜர்பைஜானில் தான் அனைத்து காட்சிகளையும் படமாக்கி இருக்கிறார்கள். இப்படம் ‘பிரேக் டவுன்’ என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பது உறுதியாகி இருக்கிறது.