விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஏஸ்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘டிரெயின்’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதை தாண்டி அவர் டோலிவுட் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்தப் படத்தில் நடிகை தபுவும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கவிருப்பது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்தப் பேட்டியில் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.
இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான கடைசி இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் பெரிதளவிலான வரவேற்பை பெற்றவில்லை. இப்படியான நிலையில் அவர் இயக்கத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி, ” என்னுடைய இயக்குநர்கள் முன்பு செய்த படைப்புகளை வைத்து அவர்களை நான் மதிப்பிடமாட்டேன்.
எனக்கு கதைப் பிடித்திருந்தால் அதில் நான் நடித்துவிடுவேன். அவர் சொன்னக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அத்திரைப்படம் ஒரு முழுமையான அக்ஷன் படமாக இருக்கும். இப்படியான ஒரு களம் இதற்கு முன் நான் செய்திடாதது.

நான் செய்த விஷயங்களையே மீண்டும் செய்யாமல் பயணிக்காத களங்களுக்கும் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். படத்தின் படபிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்குகிறோம். படத்தில் நடிகை தபுவுக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அவர் மிகவும் திறமையான நடிகை.
இதுபோன்ற திறமையான நடிகையுடன் பணிபுரிவதை எண்ணியும் இதற்கு முன் நான் இணைந்து நடித்திடாத நடிகை என்ற விஷயத்தை எண்ணியும் மகிழ்ச்சி அடைகிறேன்.” எனக் கூறியிருக்கிறார்.