மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஒரு நேரத்தில் கடுமையான கடன் தொல்லையால் சிரமப்பட்டார். ஆனால் அதன் பிறகு கடினமாக உழைத்து இன்றைக்கு அதிக அளவில் வருமான வரி செலுத்தும் நபராக உயர்ந்திருக்கிறார். கடந்த நிதியாண்டில் மட்டும் அமிதாப்பச்சன் ரூ.350 கோடி அளவுக்கு சம்பாதித்து இருக்கிறார். இதன் மூலம் அவர் அதிக பட்சமாக ரூ.120 கோடியை வருமான வரியாக செலுத்தி இருக்கிறார்.
தற்போது `கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சி நடந்தது. அதன் மூலமும், விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடித்தது, பல்வேறு நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் மூலம் கிடைத்த வருவாய் என மொத்தம் 350 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. கடந்த 15ம் தேதி 52.50 கோடி கடைசி தவணை அட்வான்ஸ் வருமான வரியாக செலுத்தியதாக அமிதாப்பச்சனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் பாலிவுட்டில் பாட்சாவாக கருதப்படும் நடிகர் ஷாருக்கான் ரூ.92 கோடி அளவுக்கு மட்டுமே வருமான வரி செலுத்தி இருக்கிறார். ஷாருக்கானை விட 30 சதவீதம் அமிதாப்பச்சன் வருமான வரி கூடுதலாக செலுத்தி பாலிவுட்டில் அதிக வருமான வரி செலுத்திய நபர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
82 வயதில் அமிதாப்பச்சன் இந்த சாதனையை செய்திருப்பது மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதாக பலரும் பாராட்டி இருக்கின்றனர். அதோடு அமிதாப்பச்சன் இன்னும் ஓயாது நடித்துக்கொண்டே இருக்கிறார். கடைசியாக முடிவடைந்துள்ள கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ஒரு எபிசோட்டிற்கு ரூ.5 கோடி ரூபாயை அமிதாப்பச்சன் கட்டணமாக வசூலித்து இருக்கிறார் என்கிறார்கள். அடுத்த கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை அமிதாப்பச்சன் நடத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் ஓய்வு பெறுவது குறித்து அமிதாப்பச்சன் மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார்.