‘விடுதலை 2’ படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘விடுதலை 2’ படத்தில் இருந்து ‘தினம் தினமும்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 20-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. இதனிடையே, இன்னும் படப்பிடிப்பு பாக்கியிருக்கிறது என்கிறார்கள்.
சுமார் 15 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த வெற்றிமாறன் முடிவு செய்திருக்கிறார். இதற்காக சென்னைக்கு வெளியே அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இத்துடன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்கிறார்கள். அதனைத் தொடர்ந்து முழுமையாக இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விடுதலை’. மாபெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, ‘விடுதலை 2’ தயாராகி வருகிறது. இதுவும் 4 மணி நேரத்தையும் தாண்டி காட்சிகள் இருப்பதால் 3-ம் பாகத்துக்கு செல்லலாமா என்ற ஆலோசனையில் படக்குழு இறங்கியிருக்கிறது.
அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, 3-ம் பாகம் குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று இப்போதைக்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.