அதிக வசூல் செய்த இந்தியப் படம் என்ற மாபெரும் சாதனையை ‘புஷ்பா 2’ படைக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் தயாரான படங்களுள் அதிக வசூல் செய்த படம் ஆமிர்கான் நடிப்பில் வெளியான ‘டங்கல்’. இப்படம் ரூ.1950 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் ‘பாகுபலி 2’ இருக்கிறது.
இப்படம் ரூ.1810 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு சாதனையையும் ‘புஷ்பா 2’ முறியடிக்கும் என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள்.
ஏனென்றால், தற்போதைய நிலவரப்படி ‘புஷ்பா 2’ திரைப்படம் சுமார் 1,800 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இன்னும் பல மாநிலங்களில் இப்படம் நல்ல வசூல் செய்து வருகிறது.
இதனால் முதல் ரூ.2,000 கோடி வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை ‘புஷ்பா 2’ படைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல் ‘பேபி ஜான்’ படத்தின் முதல் நாள் வசூலை விட ‘புஷ்பா 2’ படம் அதிக வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், சுனில், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதன் பாடல்களுக்கு தேவி ஸ்ரீபிரசாத், பின்னணி இசைக்கு சாம் சிஎஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ‘புஷ்பா 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் மட்டுமே வெளியாகி இருக்கிறது.