துபாயில் நடைபெற்று வரும் துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமார் அணி 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில் அஜித் குமார் 414ஆம் எண் கொண்ட காரின் ஓட்டுநராக கலந்துகொண்டார். அவருக்கு ‘ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ்’ விருது வழங்கப்பட்டது.
அஜித்குமார் தனது ரேஸிங் அணியை தொடங்கிய பிறகு கலந்து கொண்ட முதல் சர்வதேச பந்தயத்திலேயே மூன்றாவது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 992 பிரிவில் 3வது இடமும் ஒட்டுமொத்த போட்டியில் 23வது இடத்தையும் அந்த அணி பிடித்துள்ளது.
இந்த போட்டியை பல்வேறு பிரபலங்கள் நேரில் சென்று கண்டுகளித்தனர். குறிப்பாக நடிகர்கள் மாதவன், ஆரவ் உள்ளிட்டோர் தங்கள் நண்பர் அஜித்தை நேரில் சென்று உற்சாகப்படுத்தினர். அஜித் அணியின் இந்த வெற்றிக்கும் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
துணை முதல்வர் உதயநிதி: அஜித் மற்றும் அவரது அணி கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் 3ஆம் பிடித்துள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். அஜித்துக்கும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் இன்னும் அதிக பெருமையைக் கொண்டுவருவதில் அஜித் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
பாஜக தலைவர் அண்ணாமலை: இது இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் தருணம். அஜித்குமார் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு பாதையிலும் தனித்துவத்துடன் சிறந்து விளங்குகிறார். மேலும் அவரது ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பால் எண்ணற்ற மனிதர்களை ஊக்குவிக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன்: அஜித்குமார் ரேஸிங் அணி முதல் பந்தயத்திலேயே அசாதாரண சாதனை படைத்துள்ளது. தனது பன்முகத்தன்மை கொண்ட ஆர்வங்களில் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் எனது நண்பர் அஜித்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய மோட்டார் விளையாட்டுகளுக்கு இது ஒரு பெருமைமிக்க மற்றும் முக்கியமான தருணம்.
நடிகர் மாதவன்: மிகவும் பெருமையாக உள்ளது. என்னவொரு மனிதர், அஜித் குமார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்: நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நாங்கள் அனைவரும் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம்.
இயக்குநர் சிவா: உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அஜித் சார். தொடர்ந்து வெற்றி பெற்றி, என்றென்றும் எங்களை ஊக்கப்படுத்துங்கள். உங்கள் மன உறுதி மற்றும் விடாமுயற்சிக்கு எனது அன்பும் மரியாதையும்.