ஜி.வி.பிரகாஷுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று நடிகை திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனது மனைவி சைந்தவியை விவகாரத்து செய்தார் ஜி.வி.பிரகாஷ். இது தொடர்பாக விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. இதற்கு திவ்யபாரதி தான் காரணம் என்று தகவல் பரவியது. மேலும், இதனை இருவருமே ‘கிங்ஸ்டன்’ விளம்பரப்படுத்தும் நிகழ்வில் மறுத்தார்கள். ஆனால், இது தொடர்பான செய்திகள் வெளியாகி கொண்டே இருந்தன.
தற்போது இது தொடர்பாக திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது பெயர், தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் இழுக்கப்பட்டு இருப்பதற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஜி.வி.பிரகாஷின் குடும்ப விவகாரத்துக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. மேலும், வெளிப்படையாகச் சொன்னால், நான் எந்தவொரு நடிகருடன் டேட்டிங் செய்ய மாட்டேன், நிச்சயமாக திருமணமான ஆணுடனும் இல்லை. ஆதாரமற்ற வதந்திகளை நம்புவதால் என் கவனத்தை ஈர்க்கவில்லை என்று இதுவரை அமைதியாக இருந்தேன்.
ஆனால், இது எல்லை மீறி போய்விட்டது. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். இதனை நான் மறுக்கிறேன். நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண். எதிர்மறை கருத்துகளை பரப்புவதை நிறுத்துங்கள். இந்த விவகாரத்தில் இதுவே எனது முதல் மற்றும் இறுதி அறிக்கையாக இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.