புதுடெல்லி: “பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில், அரசு தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறது. நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து, அமைதியான சமூகமாக வாழ வேண்டும்” என்று பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.
டெல்லியில் நடிகர் அஜித்குமாருக்கு நேற்று (ஏப்.28) பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் அஜித்குமார் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார். இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், “பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில், அரசு தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறது. நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து, அமைதியான சமூகமாக வாழ வேண்டும்.
இன்று (ஏப்.29) நான் நமது ராணுவ வீரர்களைச் சந்தித்தேன். அவர்களுடைய தியாகத்தை நாம் ஒவ்வொருவரும் வணங்க வேண்டும். ராணுவ வீரர்களின் கடுமையான உழைப்பால்தான் நாம் அனைவரும் நிம்மதியாக உறங்குகிறோம். ராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரவு பகல் பாராமல் அவர்கள் நமது நாட்டின் எல்லையைப் பாதுகாக்கின்றனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒவ்வொரு மதத்தவருக்கும், சாதியினருக்கும் மதிப்பளித்து நாட்டில் சண்டையிட்டுக் கொள்ளாமல், ஒற்றுமையோடும் அமைதியோடும் வாழ வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.