சிபிராஜ் நடித்துள்ள படம் ‘டென் ஹவர்ஸ்’. ஆக்ஷன் கலந்த க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ள இதில் திலீபன், கஜராஜ், சரவண சுப்பையா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், ராஜ் ஐயப்பா உட்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். லதா பாலு- துர்க்காயினி வினோத் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 18-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் புதிய டிரெய்லர் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படம் பற்றி இளையராஜா கலியபெருமாளிடம் கேட்டபோது, “இது ஒரே இரவில் நடக்கும் கதையை கொண்ட படம். சென்னையில் இருந்து கோவைக்குச் செல்லும் ஆம்னி பேருந்தில் ஒரு குற்றம் நடக்கிறது. இதுபற்றி ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபிராஜுக்குத் தெரிய வருகிறது. பேருந்தில் இருக்கும் 25 பேருக்கும் தெரியாமல் அது நடந்திருக்காது என்று அவர் நினைக்கிறார்.
அடுத்த 10 மணி நேரத்தில் எப்படி விசாரித்து குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் என்பது கதை. பெரும்பாலான காட்சிகளை இரவில் படமாக்கி இருக்கிறோம். பல த்ரில்லர் கதைகள் வந்திருந்தாலும் இதில் வரும் ட்விஸ்ட் யாரும் யூகிக்க முடியாததாக இருக்கும். அடுத்து இப்படித்தான் நடக்கும் என்று கணிக்க முடியாதபடி திரைக்கதையை அமைத்திருக்கிறோம்” என்றார்.