ஆமிர்கான் மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவரும் திடீரென்று சந்தித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ்டுடே’ படத்தின் இந்தி ரீமேக் வெளியானது. ‘லவ்யப்பா’ என்ற பெயரில் வெளியான இப்படத்தில் ஆமிர்கானின் மகனும், ஸ்ரீதேவியின் 2-வது மகளும் நடித்திருந்தார்கள். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், தன் மகன் படத்தை ஷாரூக்கான், சல்மான் கான் உள்ளிட்ட தனது நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் திரையிட்டுக் காட்டினார்.
இதனிடையே, சென்னையில் இன்று ஆமிர்கானை பிரதீப் ரங்கநாதன் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்பு குறித்து “நான் எப்போதும் சொல்வது போல், வாழ்க்கை எப்போதும் எதிர்பாராதது. உங்களுடைய அருமையான வார்த்தைகளுக்கு நன்றி ஆமிர்கான் சார். அந்த வார்த்தைகளை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
எது குறித்து பேசினார்கள் என்பதை பிரதீப் ரங்கநாதன் குறிப்பிடவில்லை. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டிராகன்’ படம் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தின் வசூல் அனைத்து வர்த்தக நிபுணர்களையும் ஆச்சரியப்பட வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.