அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை என்று நடிகர் சிபிராஜ் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 18-ம் தேதி சிபிராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘டென் ஹவர்ஸ்’. இதனை விளம்பரப்படுத்த பேட்டிகள் அளித்து வருகிறார் சிபிராஜ். இதில் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் தான் அரசியலில் ஈடுபடுவேனா என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் சிபிராஜ், “நான் விஜய்யின் தீவிரமான ரசிகன். ‘காதலுக்கு மரியாதை’ படத்திலிருந்தே அவருடைய ரசிகனாக இருக்கிறேன். இதனை பல இடங்களிலும் கூறியிருக்கிறேன். அவருடைய கட்சியில் இணையப் போவதாக ஒரு சில வதந்திகள் உருவாகி இருக்கலாம். ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது, அறிவும் கிடையாது.
அரசியலுக்கு ஒருவர் வரவேண்டும் என்றால், அவர் எந்த துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதை விட்டுவிட்டு தான் அரசியலுக்கு வரவேண்டும். அதற்கு மிகப் பெரிய உதாரணம் விஜய் சார் தான். அந்த தியாகத்துக்கு தயாராக இருந்தால் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டும். என்னைப் பொறுத்தவரை என் கவனம் எல்லாம் சினிமாவில் மட்டுமே. இப்போது ‘டென் ஹவர்ஸ்’ படம் எனக்கு கம்பேக் படமாக இருக்கும். ஆகையால் அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை” என்று தெரிவித்துள்ளார் சிபிராஜ்.