அடுத்து ‘வேள்பாரி’ கதையைத் தான் ஷங்கர் படமாக்க முடிவு செய்திருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. இதன் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கைரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்குப் பிறகு ‘இந்தியன் 3’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளார்.
அதனை முடித்துவிட்டு ஷங்கரின் படம் என்ன என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அடுத்து ‘வேள்பாரி’ கதையைத் தான் படமாக்க இருப்பதாகவும், அதற்கான திரைக்கதையினை கரோனா காலத்திலேயே எழுதி முடித்துவிட்டதாகவும் ஷங்கர் அளித்துள்ள பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். இதில் யார் நடிக்கவுள்ளார், தயாரிப்பாளர் யார் என்பதை ஷங்கர் தெளிப்படுத்தவில்லை.
பிரபல எழுத்தாளரும் மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசன் எழுதிய நாவல் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’. தமிழில் வெளியான மிகவும் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றான இது வாசகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நாவலின் உரிமையை பெற்று தான் இயக்குநர் ஷங்கர் படமாக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.