அஜித்துடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். ‘கூலி’ படத்தின் படப்பிடிப்புக்கு இடையே துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் லோகேஷ் கனகராஜ். அவரிடம் “ரஜினி, கமல், விஜய் என அனைவருடனும் பணிபுரிந்துவிட்டீர்கள். அஜித்துடன் எப்போது?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு “மற்றவர்களைப் போலவே எனக்கும் அஜித்துடன் இணைந்து பணியாற்ற ஆசை. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்” என்று பதிலளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த வீடியோ பதிவு இணையத்தில் ட்ரெண்ட்டிங் ஆகி வருகிறது.
தற்போது ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘கூலி’ படத்தினை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.