சென்னை: அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் ட்ரெய்லர் வியாழக்கிழமை வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விடாமுயற்சி’. அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இப்படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜன.16) வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படம் வரும் பிப்.06 அன்று ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பும் ட்ரெய்லர் உடன் வெளியாகிறது.
பொங்கலுக்கு வெளியாகும் என்று முதலில் கூறப்பட்ட ‘விடாமுயற்சி’ திரைப்படம் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இப்படம் பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக். காப்புரிமை தொடர்பாக ஹாலிவுட் நிறுவனத்துடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகளில் லைகா நிறுவனம் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.