தமிழில், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், கான்ஜூரிங் கண்ணப்பன் என பல படங்களில் நடித்திருக்கிறார் ரெஜினா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
நாளை (பிப்.06) வெளியாகும் இந்தப் படம் பற்றி அவர் கூறியதாவது: இந்தப் படத்துக்காக முதலில் இயக்குநர் மகிழ் திருமேனி அழைத்தார். கதை கேட்டேன். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அழைத்தார்கள். நான் ஊரில் இல்லாததால் ஜூம் காலில் கதையை மீண்டும் கேட்டேன். எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். அஜித்துடன் நடித்ததில் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.
மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறேன். ஆரம்ப காலகட்டங்களில் தென்னிந்திய நடிகர்களைப் பாலிவுட் ஏற்காமல் இருந்தது. இரண்டுக்கும் இடையே தெளிவான எல்லை இருந்தது. ஆனால் இப்போது பான் இந்தியா படங்கள் வெளியாகி அதை மாற்றிவிட்டன.
பாகுபலி, காந்தாரா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் போன்ற படங்களின் வெற்றி மூலம் யாஷ், ஜூனியர் என்டிஆர், பிரபாஸ் போன்ற நடிகர்களுக்கு இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. தென்னிந்திய நடிகர்களின் திறமையை இப்போது பாலிவுட் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அவர்கள் இந்தியா முழுவதும் கொண்டாடப் படுகிறார்கள். இவ்வாறு ரெஜினா கூறினார்.