சென்னை: ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் வரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த் விஸ்வானந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சொர்க்கவாசல்’. இயக்குநருடன் இணைந்து, எழுத்தாளர் தமிழ் பிரபா படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார். படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் ஆன்டர்சன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை செல்வா கவனிக்கிறார்.
அண்மையில் வெளியான டீசரில், போதைப்பொருட்கள் புழக்கம், அடிதடி, ரத்தம் என கொடியவர்கள் சூழ் சிறையில் ஆர்.ஜே.பாலாஜி சிக்கிக்கொள்ள அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பது தான் கதையாக இருக்கும் என தெரிகிறது. டீசர் படத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கருணாஸ், செல்வராகவன் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்கள் டீசரில் கவனம் ஈர்த்தன. இந்நிலையில் இந்தப் படம் வரும் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.