அஜித் – சிவா இணையும் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என்கிறார்கள் திரையுலகில்.
‘கங்குவா’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சிவா. இதனை முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது அஜித் – சிவா கூட்டணி படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தப் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.
‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு அஜித் – சிவா கூட்டணி இணைகிறது. இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால், இந்தக் கூட்டணி இணையும் படத்தின் படப்பிடிப்பு 2026-ம் ஆண்டு ஆகும் என்கிறார்கள் திரையுலகில்.
இது குறித்து விசாரித்த போது, ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. விரைவில் ‘விடாமுயற்சி’ படக்குழுவினரும் அங்கு செல்கிறார்கள். அங்கு அஜித் – த்ரிஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றை படமாக்கவுள்ளார்கள். அது முடிந்தவுடன் தான் ஒட்டுமொத்த ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புமே முடியவுள்ளது.
2025-ம் ஆண்டு முதல் 6 மாதத்துக்குள் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ வெளியாகிவிடும். அதற்குப் பின் 2 மாதங்கள் அஜித் ஓய்வெடுக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் முதல் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தவுள்ளார். இது டிசம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது. இதற்கு இடையில் சிவா படத்தைத் தொடங்க வாய்ப்பில்லை என்கிறார்கள். இந்தப் பணிகளுக்கு இடையே கதை விவாதம் உள்ளிட்ட அனைத்தையும் முடித்துவிட்டு, 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் தான் படப்பிடிப்புக்கு செல்லவுள்ளார்கள்.
அடுத்த ஆண்டு அஜித்துக்கு 2 படங்கள் வெளியீடு என்பது உறுதியாகிவிட்டது. இதனால் 3-வது படத்தையும் அடுத்த ஆண்டே வெளியீட்டுக்கு திட்டமிட மாட்டார் என்பது உறுதி. ஆகையால் 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் சிவா படத்தை தொடங்கி, அதன் இறுதியில் வெளியீட முடிவு செய்வார்கள் என தெரிகிறது.